இம்முறை தப்பாது ஒரே அடியில் வீழ்த்தினான் பெருங்கோபம் கொண்டு அவன் அடித்த அடியில் அம்பேத்கர் குப்புற விழுந்தார், விழுவதற்கு முன்பான நள்ளிரவின் மஞ்சள் வெளிச்சம் அவரை முழுமையாக்கியது,
இப்பொழுது அவரின் நிழல் மீது கருமை. வண்ணம் பூசியபடி இருட்டின் சித்து விளையாடியது, வழவழப்பான திருமேனி சிதிலமடைந்த புராதான சிற்பம் போல சொரசொரப்பாக இருந்தது. குப்புற விழுந்ததில் அவரின் இடது கை முறிந்து உட்புறம் தூள் தூளாகசிதைவுற்றது போல தெரிந்தது,
நெடுநேரம் அவர் மீதான வன்முறையை நிறுத்தமால் தொடர்ந்து ஏவியபடி இருந்த சண்முகநாதன் கடப்பாரையை எடுத்து அவர் தலையை நோக்கி அடிக்க முற்பட்டபோது இன்ஸ்பெக்டர் கேசவன் மறித்து.. தம்பி…….தம்பி…… நில்லுடா…. என்று சொல்லிவிட்டு புன்னகைத்தார். மறு கனம் தனது பூர்வ ஜென்மபலனை அடையப்போகும் பூரிப்பு தலைக்கேறியது. அம்பேத்கரின் கை நிழல் இன்ஸ்பெக்டரின் கால்களில் முடிந்து நின்றது. பூட்ஸ் கால்களின் அடுத்த அடி நிழலை மிதித்து நசுக்கியது, சுவரில் பூசிய சுண்ணாம்புக் காரையும்,மணலும் சரிந்து குவிந்து கிடந்த குவியலை நாட்டு நாய் கிளறிவிட்டு உட்கார்ந்தது.…சுற்றும் பார்த்து விட்டு நான் ஒரு அடி அடித்துக் கொள்ளவா?என்று சின்ன குழந்தையைப் போல சண்முகநாதனிடம் கெஞ்சினார், இன்ஸ்பெக்டர் நாளை நமக்கு ஆகி கொள்வார் என்று சண்முகநாதன் கடப்பாரையை அவர் கையில் கொடுக்க பலம் கொண்ட மட்டும் அம்பேத்கரை அடித்து துவைத்தெடுத்தார்,
தன் மீது விழும் அடிகளை தாங்கிக் கொண்டு பெருநகரத்தின் வாகனங்களின் இடைவிடாத இரைச்சலில் அம்பேத்கர் முனங்கி கொண்டே இருந்தார், தன் மீது அடி விழும்போதல்லாம் வாங்கிகொண்டார். ஆஜானுபாகுவான தனது கணத்த உடல் மீது உலோக கம்பிகளின் குத்தல்களில் குப்புற விழுந்து சேதாரமாவதை தாண்டி எதையும் அவரால் யோசிக்க முடியவில்லை,
வலி தாங்கும் பக்குவத்தினை பிறப்பு தனக்கு வழங்கியிருக்கும் மாபெரும் கொடையாக கருதினார், தனக்கு இருந்த நல்வாய்ப்புக்கள் அனைத்தையும் காலம் அரித்து சென்றதையும், தனது பழுதடைந்த சிறுநீரகங்களில் இருந்து ஒழுகும் நீரின் சொட்டுகளை எண்ணிக்கொண்டும், எழுதி முடிக்காத பக்கங்களில் தேசத்தின் அவமானங்களை கோர்த்து முனங்கி கொண்டிருந்தார்,
தனது உதவியாளரும் மனைவியும் மாறி மாறி வற்புறுத்தி தூங்க சொல்லியும் எரியும்விளக்கை அனைக்காமல் அவமானங்களுக்கு மருத்து தயாரிக்கும் சூத்திரங்களை எழுதினார், இடை இடையே சென்று தனது வெளிவராண்டவை பார்த்து கொண்டு வந்தார், நள்ளிரவில் தன்னை தேடி குடியானவன் யாரவது வரலாம் என்றும் அவன் பஞ்சடைந்த கண்களும், வற்றிய வயிறுமாக. குற்றுயிரும் குலையிருமாக வந்து நின்று இறைஞ்சலாம். என்றும் ,இந்த அடியேனின் திருவாய் மலரும் ஒற்றை வார்த்தையில் அவனது குதுகுதுப்பு வெளிபட்டு உயிர் திரும்ப வரலாம் என்றெண்ணி, வரண்டா வை நோக்கி பார்வையை வைத்தும் அதிகம் நேரம் வந்து அங்கு வந்து திரும்புவதை வாடிக்கையாக்கி கொண்டார்.. ஏனெனில் இதுதான் அவரின் அன்றாடம் இதில் பிழையில்லாமல் நடந்துவருகிறது, அவரும் அதனை அடிபிசகாமல் எதிர்கொண்டு வந்திருக்கிறார்.
அப்படித்தான் தற்போது தன் மீது வாள் கொண்டு கீறும் பிறவியின் ஆத்திர மூட்டிய இறைஞ்சல்களை தாங்கிய படியும், எங்காவது நின்று கதறும் குடியானவனின் இறைஞ்சல்கள் பக்கம் காதினை வைத்துக்கொண்டு. அடி பொறுத்து கொண்டிருக்கிறார்.
அவர்கள் அடித்துக்கொண்டு இருந்ததை எதிரே இருந்த உணவகத்திலிருந்த அனைவரும் பார்த்துக் கொண்டிருந்தனர், ஏடிஎம் காவலாளி இங்கும் அங்குமாக நகர்ந்து நிலைகொள்ளாமல் தவித்து கொண்டிருந்தார். ஸ்கூட்டியில் வந்த பெண்னொருத்தி அடிக்கிற திசையின் பக்கம் திரும்பி பார்க்காமல் வேகமாக ஓட்டிச் சென்றாள்,
மோட்டர் சைக்கிளை புகை ததும்பு ஒட்டி வந்த வந்த உடல் பெருத்த கருப்பு நிற முதியவர் அதிர்ச்சியுடன் நின்று கொண்டு வேடிக்கை பார்த்தவர்களை என்ன ஜென்மங்களோ! என்று காறி உமிழ்ந்து விட்டு அம்பேத்கரை போட்டு அடிக்கும் திசை பக்கம் குரலிட்டார்,
ஏப்பா…… ஏய் …பிரச்சினை ஆகப்போகுது இது நல்லதுக்கில்ல…..அவனுங்க………. பெரிய பிரச்சனையா………. ஆக்கப் போறானுங்க…… கோர்ட்……… கேசுனு……… காலத்துக்கு அலையப் போறீங்க…. பெரிய மனுஷன்.. கஷ்டப்பட்ட ஆத்மா..தப்பு…….. செய்யாதீங்க……. போட்டுட்டு போங்க…சொல்றேன், சொன்ன பிறகு உங்க ஆக்ரோஷம் நிக்கலைனா சீரழிய போறது நீங்கதான்….என்று சொல்லிக்கொண்டும் கத்தி கூப்பாடு போட்டும் இருந்த அவர் மீது டீக்கடைகாரர் தேநீர் குவளை கழுவிய நீரை ஊற்றி வேறெங்குனாச்சும் போய் கத்து, இடத்த காலி பண்ணு என்ற பாசங்கில் உள்நுழைந்தார்.
இன்ஸ்பெக்டர் ஸ்டேஷனுக்குள் நுழைந்ததில் இருந்து எல்லோரிடமும் கோபமாக பேசினார்,டேபிள் வெயிட் அடிக்கடி கீழே விழுந்து சத்தம் எழுப்பியது, ரெக்கார்டு ரூமில் இருந்து டைப் அடிக்கும் சத்தம் கேட்டுக் கொண்டே இருந்தது சத்தத்தின் திசையில் காதினை வைத்து இன்ஸ்பெக்டர் ஆங்காரமாக கத்தினார்,சுவரில் முட்டுவதைப் போல வந்து சல்யூட் அடித்து நிமிர்ந்து நின்றார் ஏட்டையா முருகானந்தம். வெளியில் ரோந்து போவதற்காக தயார் நிலையில் இருந்த ஜீப்பில் டிரைவர் உட்கார்ந்து கண்ணாடி வழியாக ஸ்டேஷனுக்குள் நடக்கும் காட்சிகளை பார்த்துக் கொண்டிருந்தார்,இன்ஸ்பெக்டர் இறங்கும் போது கோபமாக சென்றது, ஸ்டேஷன் பெரும் நிசப்தத்தில் இருப்பதும் குழப்பத்தில் ஆழ்த்தியது. ஒரு பெண் தலையில் சொட்டும் ரத்தத்தை கையால் தடுத்தபடி உள்ளே நுழைந்தார், ஸ்டேஷன் இயல்பு நிலைக்கு மாறியது இன்ஸ்பெக்டர் எழுந்து அப்பெண்னை உற்றுப் பார்த்தபடி இருந்தார்,அவள் அழுது கொண்டே வழியும் இரத்தத்தை துடைத்த படியும் கூக்குரலிட்ட ஆற்றாமை துயர் அதுவரை ஸ்டேஷனில் இருந்து அமைதியை குலைத்து போட்டுக் கொண்டிருந்தது, ,இன்ஸ்பெக்டர் கோபம் ஏறிக்கொண்டே போனது,அவள் தன்னிடம் வந்து சொல்லும் போதே இன்ஸ்பெக்டரிடம் போய் சொல்லு.. என்று சொல்லியும் கேட்காமல் தன்னிடமே சொல்லிக் கொண்டிருப்பதையும் அதை இன்ஸ்பெக்டர் பார்த்துக் கொண்டிருப்பதையும் விரும்பாதவளாக கான்ஸ்டபிள் மாலதி அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தாள், ஒரு தெருவே உள்ளே நுழைந்தது கூச்சலிட்டதும் இப்பொழுது அப்பெண் அமைதியாக இருந்தாள்,சிறிதுநேரத்தில் இன்ஸ்பெக்டர் வெளியேறுவதற்கான ஏற்பாடு நடந்தது,
காரை எடுக்கும் சத்தம் கேட்டதும் மாலதி நிம்மதி பெருமூச்சு விட்டாள்,ரத்தம் வழிந்த அப்பெண் மாலதியிடம் கழிவறையை காண்பிக்க சொன்னாள்,ஸ்டேஷனில் உள்ள அனைவரும் அவளை மருத்துவமனைக்கு போக சொன்னார்கள்,இன்ஸ்பெக்டர் போனதிலிருந்து அவளுக்கு கருணை பார்வைகள் வந்த வண்ணம் இருந்தது,ஒருவர் ஆம்புலன்ஸ்க்கு போன் செய்தார்,இன்னொரு போலீஸ்காரர் மருத்துவமனைக்கு போன் செய்துசிகிச்சையை தாமதிக்காமல் செய்ய வேண்டினார்,நிகழ்வுகள் அடுத்தடுத்து யாரிடமும் ஒப்புதல் வேண்டாமல் நகர்ந்தபடி இருந்தது,
இன்ஸ்பெக்டர் நகரின் நெரிசல் பகுதியில் நின்று தன்னால் செய்ய முடியும் என்று நினைப்பதை செய்ய முடியாமல் தடுக்கும் நிலையை வெயிலின் உக்கிரதோடு அனுபவித்துக் கொண்டிருந்தார், உறுத்தல் பழுத்து நின்றது,தடுக்கும் யாருடைய பேச்சும் காதில் விழுந்தாலும்,செயலைக் குறுக்கிடாத தியான நிலையில் தன்னை நிலை நிறுத்திக் கொண்டு யோசனையில் இருந்தார்,
சண்முகநாதன் ஸ்டேஷனுக்கு வந்த பொழுது இன்ஸ்பெக்டர் அங்கு இல்லை முருகானந்தத்திடம் கேட்ட பொழுது, காலையில் உன்னை கேட்டுக் கொண்டிருந்தார்…அதன் பிறகு உக்கிரமான கோபம், யாரும் நெருங்க முடியவில்லை,நீ அவரிடம் பேசினாயா? என்று கேட்டார்,கண்டிஷன் பெயில் கையெழுத்து நோட்டினை எடுத்து கையப்பமும் கைரேகையும் இட்ட பிறகு விரல் ரேகை மையினை தலையில் தடவி கொண்டே ராத்திரி பனிரெண்டு மணிக்கு எனக்கு போன் செய்திருக்கிறார்.இருபது முப்பது முறை இருக்கும்,கொஞ்சம் எனக்கு பயம் தான, நான் போனை எடுக்கவில்லை. ஸ்டேஷனில் அவர் இல்லை என்று தெரிந்து தான் இப்பொழுது கையெழுத்து போட வந்திருக்கிறேன் என்று சொல்லிக் கொண்டிருந்தான்.
சண்முகநாதன் உன்னை அவர் கேட்ட தொனி உனது தயவு அவருக்கு தேவை உள்ளது என்பதைப் போல இருந்தது, எதற்கும் போன் அட்டென்ட் செய்து பேசு என்று முருகானந்தம் சொன்னதும், சண்முகநாதனுக்கு படபடப்பு நீங்கி உள்ளூர மிதப்பு தட்டியது,
இன்ஸ்பெக்டர் போனை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார், பெரிய மீசை சண்முகம் என்று ட்ரூ காலர் காட்டியது, உக்கிரமான வெயிலை பெருநிழல் விழுங்கி கொஞ்ச நேரம் மயக்க முறை செய்யும்சித்து தன் மீது இறங்கியது கண்டு.குளிர்ந்த வாசனை திரவியங்கள் நிரப்பிய பெருமழை தூவியது போல நின்று கொண்டிருந்தார், சண்முகம் எங்கப்பா இருக்க? என்று பரிவான குரலில் கேட்டபடி நீ ஏண்டா போன எடுக்கல? ராத்திரி எத்தனை முறை கூப்பிட்டேன், எங்கடா இருக்க? என்று உரிமையோடு பேச ஆரம்பித்தார்.
சார் நான் ஸ்டேஷன்ல தான் இருக்கேன் உங்களுக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கேன். கண்டிஷன் பெயில் கையெழுத்து போட்டுட்டு நிக்கிறன் சார்…….ஸ்டேஷன் வருவீங்களா…… இல்ல எங்கேன்னு சொல்லுங்க…… நான் வந்துடறேன்……என்றான்
நீ ஒன்னு செய்யி………ஸ்டேஷனுக்கு வெளியில வந்து எனக்கு போன் பண்ணு……..
சரிங்க சார்……..
வேகமாக பைக்கை எடுத்து சாலை தெரு பக்கம் வந்தான்,இன்ஸ்பெக்டர் டிரைவரிடம் காரை எடுக்கச் சொன்னார்..இன்ஸ்பெக்டர் காருக்கு பின்னாலே பைக்கை மெதுவாக ஓட்டினான் சண்முகநாதன், என்னவாக இருக்கும் ஏன் எதுவும் சொல்லாமல் இப்படி போகிறார் என்று குழப்பத்தில் பைக்கை மெதுவாக மெதுவாக பின்னோக்கி கொண்டே ஒட்டியபடி சென்றான்,பைக்கின் வேகம் காரை பின்னுக்கு இழுத்தது, இருவரும் நான்கு ரோடு சாலைவிரிவாக்கம் பக்கம் வந்து சேர்ந்தனர்,
முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது லட்சுமண பெருமாள் என்கிற முதியவரிடம் புகார் எழுதி வாங்கினார்கள்,
லட்சுமணபெருமாள் த/பெ வேலாயுதம் செட்டியார், காசு கடை பஜார் தெரு, கதவு எண் 10/243 முகவரியில் வசித்து வரும் நான் நள்ளிரவு சுமார் ஒரு மணி அளவில் எனது நகைக்கடையை பூட்டிவிட்டு பேருந்து நிலையம் வழியாக ராம் தியேட்டர் பின்பக்கம் சென்று கொண்டிருந்தேன், அப்பொழுது பெரிய மீசை சண்முகநாதன்,இன்ஸ்பெக்டர் கேசவன் இருவரும், அம்பேத்கரின் கால்களை அடித்து நொறுக்கி கொண்டிருந்தனர் நான் அவர்களை எவ்வளவு சொல்லியும் அவர்கள் கேட்கவில்லை இன்ஸ்பெக்டர் கேசவன் கடப்பாரையால் அம்பேத்கரின் தலையில் அடித்து தனது பூட்ஸ் கால்களால் வயிற்றுப் பகுதியை எட்டி உதைத்து அவரின் குரல்வளையில் மிதித்து கொண்டு இருந்தனர், தடுத்த என்னை கையால் குத்தி தள்ளினார் இன்ஸ் பெக்டர், பெரிய மீசை சண்முகநாதன் கையில் வைத்திருந்த வாளால் அம்பேத்கரின் நீல நிற கோட்டை கிழித்துஅவரின் பூட்ஸ் காலை வெட்டி எடுத்தான் அவரின் காது, கண், மூக்க, வாய், என ஒவ்வொரு உறுப்பாக சிதைத்த படி இருவரும் கொடூரமாக அடித்தனர்,
நான் வம்பு வழக்கு வந்து விடும் என்று எச்சரித்தேன் அதற்கு இன்ஸ்பெக்டர் கேசவன் என்னை தாயோளி இவன அடிச்சா உனக்கு ஏன் கோவம் வருது என்று என்னை கேட்டார்,நான் அங்கிருந்து தப்பித்து வந்து இப்புகாரினை அளிக்கின்றேன், இன்ஸ்பெக்டர் கேசவனும் பெரிய மீசை சண்முகநாதனும் அம்பேத்கரை அடித்து துவைத்து எடுத்தார்கள், இனி எங்காவது அம்பேத்கர் நிற்பதை பார்த்தாலே அடிப்போம் என்று கெக்கலித்து சிரித்தார்கள் ,மேற்படி நபர்கள் மீது சட்ட நடவடிக்கை தேவை என எழுதி கையெழுத்து போட்டுவிட்டு தன்மீது வழிந்தொழுகும் வியர்வை சட்டையை நனைக்க வாழ்வு இத்துடன் முடியப்போவதாக நினைத்து ஸ்டேஷனை விட்டு வெளியேறினார் லட்சுமணப் பெருமாள்.
கடை. வீடு, கடை, வீடு என்றிருந்த லெட்சுமண பெருமாளா இது? என்று காசுக் கடை பஜார் முழுவதும் பேசிக்கொண்டார்கள், வீட்டில் இரண்டுநாளாக சண்டை உனக்கு என்ன அவ்வளவு அக்கறை? எவன் எவனை அடிச்சா என்ன? கோர்ட் கேசுனு அலைஞ்சு சாகப்போறியா? நீ ……..என்று சொல்லிக் கொண்டே இருக்கும் போது மூத்த மகன் அவரை கன்னத்தில் அறைந்துவிட்டான், நாம போலீசு ஸ்டேஷனுக்கு போற சாதியா ? நீ செஞ்ச காரியத்த நினைச்சா அருவருப்பா இருக்கு…….என்று மனைவி …..பேசிக்கொண்டிருக்கும் போது ஸ்டேஷனில் இருந்து நிறைய போலீசு வந்து வீட்டின் முன்புறம் குவிந்தார்கள். அவர்கள் தன்னை பாதுகாக்க வந்திருப்பதாக உணர்ந்த லெட்சுமண பெருமாள் எனக்கு இது ஏன்? அப்படி உசுரு மேல பயமிருந்த நான் ஏன் புகார் கொடுக்கனும்….இல்ல உங்கள பாக்க மினிஸ்டர் வர்றாரு அது தான் வந்தோம். என்று சொல்லிவிட்டு வீட்டில் சேர் இருந்தால் நாலு எடுத்து வாசல்ல போடுங்க என்று சொல்லிவிட்டு இருட்டு பக்கம் போய் சிகரெட்டை பத்த வைத்தார்,
சிகரெட் நெருப்பு தீப்பொறி சன்னம் சன்னமாக கனன்று கொண்டிருந்தது. தூரத்தில் சைரன் சத்தம், போலீஸ் விரைப்பாக நின்றார்கள், வெளிச்சம் தெரு முழுவதும் பிரகாசமாக எரிந்தது
மினிஸ்டர் காரை விட்டு இறங்கியதும், லட்சுமன பெருமாள் தோளில் கைபோட்டு நான் பாத்துக்கிறேன். என்றபடி வீட்டிற்குள் அழைதுச் சென்றார். உங்க கூட நான் இருக்கிறேன் போதுமா? என்று சொல்லும் போகு அவர் மனைவி கையெடுத்து கும்பிட்டார்…… வீட்டின் உட்புற வடக்கு சுவர் மேலே அவர்கள் கல்யாண போட்டோ கருப்பு வெள்ளையில் இருந்து கலர் கொடுத்து மாற்றி மாட்டியிருந்தனர், மூத்த மகன் போட்டோவும், விபத்தில் அகலா மரணமடைந்த மகளின் போட்ட பக்கத்தில் அம்பேத்கர் ஞான புன்னகை ஒளிர கம்பீரமாக நின்றபடி இருக்கும் புகைப்படம்…. மாட்டப்பட்டிருந்தது…. நிலைக்குத்தி நின்ற மினிஸ்டர் கேட்டார் பராவயில்லையே என் வீட்டில் கூட இல்லை, மாட்டனும்னு தோனலை எலெச்சன் நேரத்தில் தேடிப்போவேன், ஆனால் உங்க வீட்டில் அம்பேத்கர் படம் இருப்பது …..ஆச்சர்யமாக இருக்கே ….. சொந்த பந்தம் ஏதும் சொல்லலையா? தெருக்காரங்க கத்திருப்பாங்களே …..புள்ளைகள் கேட்கலையா? என்று அடுக்கடுக்கான கேள்விகள் மினிஸ்டர் கேட்டுக்கொண்டிருக்கும் பொழுது
எல்லாம் நடந்து முடிஞ்சுருச்சு……வீட்டில போட்டோ இருக்கனும் என்று கறாராக நின்று கொண்டார். என்றார் அவரின் மனைவி
எங்க அப்பா கூட ஒருமுறை இவருகிட்ட மாப்பிள்ளை யாருக்காக உழைச்சு காலு கை தேய்த்தாரோ அவனுங்க வீட்லயே மாட்ட மாட்டானுங்க……. அந்த ஆளு அவனுங்க வாழ்க்கையையே மாத்திருக்காரு…..ஆன ஒருத்தன் வீட்லயும் அவரு போட்டோ இருக்காது ஏன்னு தெரியுமா? அதுதான் அரசியல்.
இந்த அரசியல் நமக்கு தேவையில்லாதது. இவ்வளவு ஏன் உங்களால நகை கடையில் மாட்டிக்கிட்டு வியாபாரம் பார்க்க முடியுமா? கேள்வி பட்டிருப்பீங்க மேலத்தெரு வாத்தியாரு தன்னோட மூத்த மகனுக்கு அம்பேத்காருனு பேரு வச்சதுக்கு அந்த பையன் படாத பாடு படுதாம், கதை கதையா சொன்னாரு அவரு பேட்டி விகடன்ல கூட வந்துருக்கு…தெரியுமா?
மாப்பிள்ளை, ஏத்துக்க மாட்டானுங்க…. எதுக்கும் ஒரு அளவு இருக்கு மாப்பிள்ளை….பொறப்பு நல்ல பொறப்புதானேனு கேட்கிறானுக …..இதுக்கு மேலே என்ன சொல்ல என்று அழுகாத குறையாக கேட்டு பார்த்துட்டு அவரும் மண்ணுக்குள் போய்விட்டார்,
மினிஸ்டர் கையெடுத்து கும்பிட்டார். லெட்சுமண பெருமாள் நடந்ததை பெரிசு பண்ணாதீங்க …. பத்திரமா இருங்க……வீட்டில நாலு போலீசு எப்பவும் இருக்கட்டும் கடைக்கு போகும் போது வரும் போது எச்சரிக்கையா இருக்கனும் என்று பேசிவிட்டு கிளம்பினார். காரில் ஏறப்போகும் வரை தோளில் கைபோட்டபடி வந்தார், தோளோடு அணைத்து காதில் சொன்னார், சரிதானே நான் சொல்லுறது, என்று எக்காள சிரிப்பு சிரித்து தோளோடு தோளாக இறுக்கினார் , சிரிப்பின் ஒலி கொடூரமாக இருந்தது, மினிஸ்டர் கை, தன் தோளிலிருந்து நழுவி விழும்படி லெட்சுமண பெருமாள் தனது தோளை மேலும் கீழும் அசைத்து இறக்கினார்..
கார் புறப்பட்டபடி நின்றது, மினிஸ்டர் ஏறினார் கும்பிட்டார், சிரித்தார் ரோட்டு பாதை பக்கம் பார்வையை திருப்பினார், வழியனுப்ப கார் முன்பு வந்த லெட்சுமண பெருமாள் காரின் உள்ளே பார்த்தார் பெரிமீசை சண்முகநாதனும், இஸ்பெக்டர் கேசவனும் மினிஸ்டர் கார் பின்னிருக்கையிலிருந்து வெறிகொண்டு உற்றுப் பார்த்தபடியே இருந்தார்கள், கார் நகர ஆரம்பித்து வேகமெடுத்தது, கார் போனதிசையில் வெளிச்சமும் இருளும் நிரம்பி இருந்தது.